Sunday, November 17, 2013

அலைகிறது மனம்.....



                   அலைகிறது மனம்.....


                                   எப்பவாவதுதான் கட்டுப்படுகிறது
                                  அதிலும்
                                  ஆயிரம் நிபந்தனைகளைக்
                                  கையொப்பமிட்டு வாங்கிக்
                                  கொள்கிறது
                                  யாருமறியாமல்
                                  எப்பவாவது என்பதுகூட
                                  அப்படிப் பழகிக்கொள்ள
                                  வைத்திருக்கிறது
                                  மனம்...

  /////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////


                      அலைகிற மனத்தினுர்டாக,,,,



                                  ஒவ்வொரு
                                   மழைக்காலத்திலும்
                                   அப்பா பழைய எங்கள் ஓட்டுவீட்டில்
                                   ஒழுகுகிற இடங்கள்தோறும்
                                   பாத்திரம் நகர்த்தி
                                   விடியவிடிய துர்ங்காமலும்
                                  மழைவிட்டதும்
                                   துர்ங்க எண்ணும்போது
                                  விடிந்துவிடுவதுமான
                                   தருணங்கள்
                                  அப்பா இறந்தபின் கிடைத்த
                                  சம்பள நிலுவையில் அம்மா
                                  ஓட்டுவீட்டை மாடிவீடாக்கி
                                  மழையைத் தடுத்தபோதிலும்
                                  மனதைத் தடுக்கமுடியவில்லை
                                  மாடிவீட்டைப் பார்க்கும்போதெல்லாம்...

                    000000000000000000

                                      இராஜராஜசோழன்
                                      சதயவிழாக் கொண்டாட்டத்தைவிட
                                      விழாவிற்காக
                                      அவனைத் தங்கள் ஜாதியென்று
                                      சுவரொட்டிகள் ஒட்டி
                                      கொண்டாடும் அட்டகாசம்
                                      அதைவிட பெரிய விழாவாக....


                0000000000000000000000000



                                        கொட்டித் தீர்க்கிற மழையில்
                                        எங்கும் நகரவிடாமல்
                                        இருக்கிற தருணங்களில்
                                        மனதில் கொட்டித் தீர்க்கிறது
                                        பெருமழையாகத் தடுக்கமுடியாமல்
                                        சாலையில் ஓடும்
                                        108 ன் ஒலி காதுக்குள்
                                        ஓடும்போது....


   00000000000000000000000000000000000000000000000000000000


                                               செய்திதான்

                                               தேளாகக் கொட்டுகிறது
                                               நெடியேறி நிற்கிறது

                                               மழையிருட்டில்
                                               அறுந்துவிழுந்த மின்சாரக்
                                               கம்பிமிதித்து அலறிய
                                               30 வயது இளையபிள்ளையையும்
                                               பிள்ளையலறல் கேட்டு
                                               ஓடி வந்த 50 வயது,,,,,
                                               விழுந்த மகனைத் துர்க்கிய
                                               வேளையில் அவரும் துக்கமானதை..
                                               இருபிணங்களும்
                                               எடுததுச் செல்லப்பட்டுவிட்டன
                                               என்கிற செய்திதான்,,,

                                                கண்ணெதிரில் வீட்டருகில்
                                                கணவரும் கண்வளர்ந்த பிள்ளையும்
                                                கரைவார்கள் காலக்கணக்கில்
                                                என்றெதிர்பாராத அந்த தங்கைக்கு
                                                யர்ர் அமைதியொளி ஏற்றுவர்...

                                                மாட்சிக்குரியோரே
                                                ஆட்சிக்குரியோரே
                                                மழைவராப் பகலில்
                                                அறுந்துவிழா பழுதுநீக்கிட
                                                ஆவன செய்வீர் அல்லலுயிர்
                                                காப்பீர்...கைகூப்பி வேண்டுகிறோம்
                                                வேறென்ன செய்திடவியலும்?

 0000000000000000000000000000000000000000000000000000000000

                                                Commonwealth
                        Human Health
                                                           ஆகட்டும்,,,


000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
                                             

                                 
           

Saturday, November 9, 2013

விகடனில்..... கவிதை...


அப்பா 
இறந்துபோனபின்
ஒரு மாலையில்
பிள்ளை கேட்டான்
நீ எப்போ
தாத்தா ஆவே?


                              ஏனென்றேன்

 நான அப்பா 
ஆவணுமே
என்றான்.

                         இயல்பாய் கேட்டான்
                         பிள்ளையென்றாலும்
                         உள்ளுக்குள்
                         பெருக்கெடுக்கிறது
                         இயல்பற்ற
                         பேரச்சம்...

                                                                                                     (நன்றி விகடன்.... 06.11.2013)
                                                              
                                                                                               
முதல் திதி என்பதால்
முன்கூட்டியே
வந்திருந்தார்கள்.

பெரியக்கா
நடு அக்கா
சின்ன அக்கா
கடைசித் தம்பி
அவரவர் குடும்பங்களுடன்

பணியோய்வு பெற்றதிலிருந்து
பாடையேறும்வரை பராமரித்து
நின்ற பொழுதெல்லாம் திதிநாளில்
மேலும் துன்பத் தேள்
கொட்டியதாய்...
புகைப்படத்தில் அப்பா
சிரித்தபடியே...

எல்லாம் முடிந்து அவரவர்
ஊருக்குத் திரும்புமுன்
சொல்லிவிட்டுப்
போனார்கள்..

கடைசிவரைக்கும் அப்பா
அவனுக்குத்தான் எல்லாம்
செஞ்சாரு பென்ஷன் உள்பட...

வீட்டுக்காக வாங்கிய
வங்கிக்கடன்
அப்பா மருத்துவமனை
செலவுக்காக வாங்கிய
கூட்டுறவுச் சங்கக் கடன்
பிஎப் கடன் என
எல்லாக் கடன்களும் போக
பிடித்தமாக வருவது
பிடித்தமில்லை என்பதை
எப்படியுரைக்கமுடியும்
என மௌனித்திருக்க
மௌனம் சம்மதம்
என்று
போகிறார்கள்...

புகைப்படத்தில்
அப்பா சிரித்தபடியே...

  (நன்றி விகடன்.... 13.11.2013)




Friday, November 8, 2013

கணையாழியில்....





                      இலையுதிர்
                      மரங்களில் எல்லாம்
                      உதிரிலைகளுக்காக
                      வருத்தத்தில்
                      மீண்டும்
                      கிளைக்க வைக்கிறது
                      இலைகளை
                      மரம்
                      நம்பிக்கை
                      குலையாமல்..

                                               ===================

                                                            இம்முறை
                                                            எலிப்பொறியில்
                                                            அணில்
                                                            கடவுளின் நீதி
                                                            மெதுவாயும்
                                                            நிதானமாயும்...


                  ////////////////////////////////////////


                        முன்பாக 
                        இருந்தால
                        தந்தி அனுப்பி
                         இருப்பார்கள்..

                         சறறு நலமாக
                         இருந்திருந்தால்
                          யாரைவிட்டாவது
                          ஒரு கடிதம்
                          எழுதப்பட்டு வந்து
                          சேர்ந்திருக்கும்..

                          சாகிற தருணங்களில்
                           யாருககும் யாரிடமேனும்
                          எதையேனும் சொல்ல
                          ஆசையிருக்கிறது


                            கேட்பதற்கும்கூட
                            ஆசையிருக்கிறது
                            இறந்துபோன ஆத்மாவிற்கு
                            செய்ய மறந்ததை
                            யாருமறியாமல்
                             மறைப்பதற்கு...


                                           =======================


                                                       செம்பருத்திச் செடியில்
                                                       சில பட்டாம்பூச்சிகளைக்
                                                       காணமுடியும்...

                                                                     அரநெல்லி மரத்தில்
                                                                      எப்போதும் சிட்டுக்குருவிகளும்
                                                                      தவிட்டுக்குருவிகளும்
                                                                      தவறாது தரிசனம் தரும்.

                                                        நாரத்தைச் செடியின்
                                                        முட்களுக்கிடையே
                                                        மனததைப் பதைபதைக்க
                                                        வைத்து ஊஞ்சலாடும்
                                                        தேன்சிட்டுக்கள்

                                                                       வேப்பமரத்தில்
                                                                       சில பச்சைக்கிளிகளும்
                                                                       நிறைய காகங்களும்
                                                                       காணக் கிடைக்கும்..

                                                         என்றாலும்
                                                         வெட்டப்பட்டதை
                                                         விடுத்து மீந்திருக்கும்
                                                         மரங்களைவிடப் 
                                                         பறவைகள்
                                                        குறைந்தே போய்விட்டன

                                                                                          மருத்துவன்
                                                                                          கெடுவைத்துவிட்ட
                                                                                          ஓர் 
                                                                                          இறுதி நோயாளியைப்
                                                                                          போல...

                                                 ===========================

(நன்றி. கணையாழி நவம்பர் 2013)

Tuesday, November 5, 2013

எழுதப்படாத உயில்....... குறுந்தொடர் 4




                       கடிதங்களைப் படிக்கப் படிக்க அங்கையர்க்கண்ணிக்கு ஆர்வமாக இருந்தது.

                      சில கடிதங்கள் வேதனைப்பட வைத்தன.
                 
                      சில கடிதங்கள் கோபப்பட வைத்தன.

                      சில கடிதங்கள் இரக்கங்கொள்ள வைத்தன.

                      சில சுவையாகவும் சிரிக்கவும் வைத்தன.

                      சில கடிதங்கள் வியக்க வைத்தன.

               அவளுக்கு வேறு ஒரு புதிய உலகத்தின் கதவுகளை அந்த அலுவலகக் கடிதங்கள் திறந்து வைத்தன.

                  சமுகத்தின் முழு உருவமும் அவள் கண்களுக்கு தெரிய ஆரம்பித்தது.

                  தன்னுடைய தந்தை இறந்துபோய் கிடைத்தவேலை என்றபோது மனதில் தனக்கு மட்டும் ஏன் இப்படி வாய்க்கிறது என்று யோசிக்கவே செய்தாள். எல்லாவற்றின் மீதும் வெறுப்பு வந்தது. விலகிப்போய் விட வேண்டும் வெகுதுர்ரத்திற்கு இவற்றின் வாசனை இல்லாமல் என்றுகூட தீர்மானம் செய்து வைத்திருந்தாள்.

                    ஆனால் அத்தனையையும் புரட்டிப்போட்டுவிட்டன ஒவ்வொரு கடிதமும்.

                    இதைவிட ஏராளமான பிரச்சினைகளுக்குள் மனிதர்களும் குடும்பங்களும் சிக்கிக் கிடப்பதையும் அவற்றிலிருந்து மீட்டுவிடுங்கள் எங்களையும் என்பதுபோல கடிதங்களின் செய்திகள் புலம்பின.

                    எங்கப்பா நேர்மையானர். ஒரு பைசாகூட லஞ்சம் வாங்காதவர். பணியில் இருக்கும்போது இறந்துபோய்விட்டார். இன்றுவரை அவருக்கு வரவேண்டிய நிலுவைத்தொகையும் குடும்ப ஓய்வூதியமும்கூட வரவில்லை என்று புலம்பியது ஒரு கடிதம்.

                     எங்க குடும்பத்திற்கென்று பூர்விகமாக இருந்தது அந்த 100 குழி நிலந்தான். அதையும் அவங்க எடுத்துகிட்டாங்க.. நாங்க ஒருவேளைகூட முழுசா சாப்பிடமுடியாம தவிக்கிறோம். எங்க நிலத்தை மீட்டுக்கொடுங்க..

                    எம்மவன் ஆத்திரத்துல கொலை செஞ்சிட்டு ஜெயிலுக்குப் போயிட்டான். என்னைக் காப்பாத்த யாருமில்லே. எனக்கு வரவேண்டிய முதியோர் உதவித்தொகை கிடைச்சா காவயிறு ரொப்பிக்குவேன்...வாங்கிக் கொடுங்க மவராசா...

                     நான் இயற்கையை நேசிப்பவன். இருந்தாலும் பக்கத்து வீட்டுக்காரர் வள்ர்க்கிற மாமரததுலேர்ந்து இலை கொட்டி தினமும் நாங்க அள்ளவேண்டியதாயிருக்கு. எங்க காம்பவுண்டுக்குள்ள வர்ற கிளைய வெட்ட ஏற்பாடு செய்யணும்..

                    இது அரசாங்க மருத்துவமனை. வசதியிலலாத நோயாளிங்க நிறைய வர்றாங்க.. ஆனா போதிய மருந்து வசதி.. இல்ல.. கட்டிடம் பழைய காலத்துக் கட்டிடம்.. இடிஞ்சுவிடும் நிலையிலே இருக்கு.. பக்கத்துலே தாய்சேய் நலவிடுதி இருக்கு.. இருக்கற நாலு கட்டிலேயும் துருப்பிடிச்சு.. ஏத்த இறக்கமா ஆடிக்கிட்டிருக்கு.. எனவே மருத்துவமனைக்கு வந்த நோயை சரி பண்ணணும்..

                      மழை பெய்தா முனிசிபல் பள்ளிக்கூடத்துல எல்லா வகுப்பறையும் ஒழுகுது. புள்ளங்க படிக்கமுடியாம நினையறாங்க.. உடனே அதை சரிப்பண்ணித் தரணும்..

                     எங்க வள்ளுவர் நகருக்கு ஒரேயொரு குடிநீர் இணைப்புக் கேட்டு இதுவரை 437 மனுக்கள் கொடுத்திட்டோம்.. ஒரு மனுக்காவது பதில் கொடுங்க.. இதுலே மனுநீதீ நாள்ல மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனு 25ம் அடங்கும்..

                    எம் பையன அரசாங்க இலவச ஆஸ்டல்ல சேர்க்கப்போறேன். என்னோட கணவர் இறந்துபோய் ஆறு வருஷமாவுது.. எனவே எனக்கு வாரிசு சர்டிபிகேட்டும்.. என்னோட பையனுக்கு வருமானச் சான்றிதழும் தரணும்..என் குடும்பத்துலே யாருமே படிக்கல்லே.. என் மவனாச்சும் படிக்கணும்னு ஆசப் படறேன்.. ஐயா.. உதவிப் பண்ணா புண்ணியமா போவும்.. உங்க புள்ள குட்டிங்க நல்லா இருக்கும்.

                      எனக்கு நாலு பொண்ணுங்க... இதுலே மூணு வாதம் வந்து காலு சூம்பிப் போச்சு.. எனவே ஊனமுற்றோர் சான்றிதழ் கொடுத்தால் என் பிள்ளைகள் வாழ்க்கை காப்பாற்றப்படும்..

                     அங்கையர்க்கண்ணிக்கு இந்த உலகத்தின் துன்பங்கள் அவளுடைய துன்பத்தை எடுத்துப்போய் துர்ரப் போட்டு புதைத்துவிட்டு வந்து இவளிடத்தில் நின்று விசுவரூபம் எடுத்திருந்தன.

                   ஒவ்வொரு கடிதத்திற்காய் பொருண்மை எழுதினாள்.

                    அதை எடுத்துப்போய் ரங்கராஜனிடம் காண்பித்தாள். பார்த்துவிட்டு அவளுடைய கையெழுத்தை அவன் ரசித்தான்.

                     உங்க கையெழுத்து குறுக்கி உக்காந்திருக்கிற முயல்குட்டிங்க மாதிரி இருக்கு.

                     அந்த உவமையை மனத்தில் காட்சிப்படுத்தி உடனே சிரித்தாள்.

                     நன்றி சார்.. ஆனால கையெழுத்து நல்லாயிருந்தா தலையெழுத்து நல்லாயிருக்காதுன்னு சொல்லுவாங்க சார்..

                     சொல்லுவாங்கதானே...? இந்த உலகம் எதைத்தான் சொல்லலே?

                    சரி இந்தாங்க இதுக்குபேரு தன்பதிவேடு பர்சோனல் ரிஜிஸ்டர்னு  பேரு.. இதுலதான் அந்தக் கடிதங்கள் பதியணும்.. ஏற்கெனவே பதிஞ்சிருக்கிறத பாருங்க.. அதத் தொடர்ந்து எல்லாக் கடிதங்களையும் பதியுங்க.. ஏதும் சந்தேகம் இருந்தா கேளுங்க.. இதக் கத்துக்கிட்டா மத்த வேல எல்லாம் சுலபம்.. எதுவாயிருந்தாலும் நானிருக்கேன்.. பதட்டப்படாம வேல பாருங்க.. ஈடுபாட்டோட வேல பாருங்க.. எதுவும் கஷ்டமாயிருக்காது..

                       ரங்கராஜனின் வார்த்தைகள் சிட்டுக்குருவிகள் பறந்து வந்து மரக்கிளைகளில் அமர்வதுபோல அவளின் தலையிலும் தோள்களிலும் வந்து அமர்ந்ததுபோல் உணர்ந்தாள்.

                        ஏனோ பார்த்த மாத்திரத்தில் அவனைப் பிடித்துப்போயிற்று அவளுக்கு.

                         ரங்கராஜ்னை ஒருமுறை பார்த்தாள்.

                         தீவிரமாக ஏதோ ஒருகோப்பில் குறிப்புக்களை எழுதிக்கொண்டிருந்தான்.

                        அங்கையர்க்கண்ணி ஒவ்வொரு கடிதமாக பதிய ஆரம்பித்தாள்.

                        எல்லாக் கடிதங்களுக்கும் சிக்கலைத் தீர்த்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.

                       அது வருவாய்த்துறையே தவிர வறுமை தீர்க்கும் துறையல்ல என்று அங்கையர்க்கண்ணி உணரும் நாள் தொலைவில் இருந்தது.

                         நாலைந்து நாட்களில் அவள் அந்த அலுவலகத்தோடு ஒட்டிப்போனாள்.

                          தாசில்தர்ர் சொன்னார்.. பரவாயில்லம்மா.. சின்னப் புள்ளயா இருந்தாலும் நல்லா புடிச்சிக்கிட்டே.. இவ்வளவு சீக்கிரம் வேலையும் கத்துக்கிட்ட.. வெரிகுட்..

                          பெரிய சான்றிதழ் கிடைத்ததுபோலிருந்தது.

                          முதல் மாத சம்பளத்தில் அவள் அந்த அலுவலக்த்தில் இருப்போருக்கு சின்னதாக ஒரு பார்ட்டி வைத்தாள்.

                           எல்லாம் முடிந்தபின்.. தனியாக ஒரு பார்சலை கொண்டுவந்து ரங்கராஜ்னிடம் நீட்டினாள்.

                           என்ன இது?

                           உங்களுக்குத்தான்.. நான் முதல் சம்பளம் வாங்கியிருக்கேன்.

                          அதான் பார்ட்டி வச்சிட்டியே?

                          அது எல்லோருக்கும் பொதுவா..இது உங்களுக்குத் தனியா..

                          ஏன்?

                          ஏன்னா நீங்க மட்டும் ஸ்பெஷல் எனக்கு.

                          என்ன சொல்றே?

                          சார்.. அப்புறம் சொல்றேன்.. இப்ப வாங்கிக்கங்க யாரும் வந்துடப் போறாங்க.. என்னோட மனம் உவந்து தர்றது இது.. வாங்கிக்கங்க..

                            ரங்கராஜ்ன் வாங்கிகொண்டான்.

                           நன்றி. ஒரு நாள் என் வீட்டுக்கு வாஙக..

                           நிச்சயமா வருவேன்.. நீங்க எப்ப கூப்பிட்டாலும் வருவேன்
என்றாள்.

                           ரங்கராஜ்னுக்கு எதுவும் புரியவில்லை.

                           சரி எப்ப வேணாலும் வாங்க என்றான்.

                          ஒரு வியாழக்கிழமை.. ரங்கராஜ்ன் வீட்டிற்கு அங்கையர்க்கண்ணி போனாள்.

                         வாங்க உக்காருங்க..

                          இதோ வந்துடறேன் என்றபடி உள்ளே போனான் ரங்கராஜன்.

                          வீட்டை கண்களால் சுற்றிப் பார்த்தாள். எதிரே சுவ்ற்றில் இருந்த ஒரு புகைப்படம் அவளை அதிர வைத்தது. ரங்கராஜன் மார்பளவு உள்ள புகைப்படம் அது. பக்கத்தில் ஒரு பெண் இருந்தாள்.

                           அருகே போய் பார்த்தாள். அந்தப் பெண் அழகாக இருந்தாள்.
உள்ளுக்குள் ஏதோ மடமடவென்று சரிய ஆரம்பித்ததுபோல் உணர்ந்தாள். படபடப்பாக இருந்தது.

                           ரங்கராஜ்ன் காபியோடு வந்தான்.

                           அவள் புகைப்படத்தைப் பார்ப்பதைக் கண்டு

                            வாங்க அங்கையர்க்கண்ணி.. அவள் என்னோட மனைவி..
என்றதும் அவளுடைய இதயம் வேகமாக அடிக்க ஆரம்பித்தது.

                            முகமெங்கும் வியர்த்துக்கொட்டியது.

                            இந்தாங்க காப்பியைக் குடிங்க..

                            காப்பியை வாங்கும்போது கைகள் நடுங்கின.

                            அப்போதுதான் பயங்கரமாக ஒரு பெண்ணின் அலறல் கேட்டது.

                            சட்டென்று பயந்துபோய் கையிலிருந்து காப்பி டம்ளரை அப்படியே நழுவிவிட்டாள் அங்கையர்க்கண்ணி.

                                                                                                        (உயில் எழுதப்படும்)

///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

குறிப்பு

                    வணக்கம்.

                    இந்த வாரக் கல்கியில் நண்பர் ரிஷபனின் ஒரு சிறுகதை
                    வெளிவந்துள்ளது.

                    கதையின் தலைப்பு எப்பவாவது ஒரு ரவுண்டு.

                    நீண்ட நாட்களுக்குப் பின் படித்த ஓர் அற்புதமான
                   மனத்தை நெகிழ வைத்த கதை அது.

                    நெடுநேரம் மனத்தைக் கட்டிப்போட்டிருந்தது.

                    கதையின் பொருண்மை.... அதை சொன்ன விதம்..
                    காட்சிகள்...எல்லாமும் வெகு நேர்த்தியாகப்
                    பின்னப்பட்டிருந்தது.

                    ஒரு நல்ல திரைக்காட்சியைக் கண்டதுபோல
                   மனநிறைவு.

                   உலக தரத்திற்கு இயங்கும் சிறுகதை அது.

                   திருமிகு ரிஷபன் கட்டாயம் அவரது பதிவில்
                  பதிவிடுவார்.. அவசியம் வாசியுங்கள்.

                    உண்மை வெறும் புகழ்ச்சியில்லை.

                     அன்புடன்

                   ஹரணி.
                 

           

Saturday, November 2, 2013

தீபாவளி ஆத்திசூடியும் அறங்களும்...



  அன்புள்ள

                            அனைவருக்கும் வணக்கமுடன் ஹரணி.

                            தீப ஒளி திருநாள்... தீபாவளி திருநாள்.. வாழ்த்துக்கள்...

                            இத்திருநாளில் எல்லோருக்குமாக இந்த ஆத்திசூடியையும் அறங்களையும் சமர்ப்பிக்கின்றேன்.


        ஹரணி
 
        ஹரணி

        ஹரணி                   




                                                                                                                                                                                                                          1. அன்பு யாவர்க்கும் செய்
                         


  2. ஆசைப்படு அடைந்த வாழ்வில்
                                        


                           







                                                                                                                                                                        3. இன்னல் யார்க்கும் தவிர்.                     



4. ஈர்ப்புடன் ஈகை புரி

                            








                                                                            5. உணமையே உயர்வென்று உணர்                          



 6. ஊருடன் மகிழ்ச்சி கொள்

                           







          7. எபபோதும் உழைத்து நில்


                           







8. ஏந்தி உதவி செய்



                           








                                                                                                         9. ஐயமில்லா உறவு வளர்



                          








10. ஒன்றுபட்டு வென்றெடு


                          








                                                                                   11. ஓயாமல் சுற்றம் பேண்



                          







12. ஔடதமாய் ஒழுக்கம் நினை



                          











                                                   13. அஃதே வீடுபேறென உறுதிப்படு.



Thursday, October 31, 2013

கவிதைகள்....




           கவிதைகள்.....கவிதைகள்.....


               00
                  எப்போது குறையும்
                  டீ மாஸ்டரின்
                  முகச்சூடு.

                                   000

              00
                  ஒவ்வொரு நாளும்
                   பகலும் இரவும்
                   யார் யாருக்கு?

                                    000

              00

                   ரயில் ஓடாத
                   தண்டவாளத்தில் ஓடுகிறது
                   மன ரயில்

                                  (நன்றி.  சௌந்தர சுகன்.... அக்டோபர்...2013).


//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////


          பேரச்சம்....

                    அப்பா இறந்துபோனபின்
                    ஒரு மாலையில்
                     பிள்ளை கேட்டான்
                    நீ எப்போ தாத்தா ஆவே?

                    ஏனென்றேன்

                    நான் அப்பா
                    ஆவணுமே
                    என்றான்

                    இயல்பாகத்தான் கேட்டான்
                    பிள்ளையென்றாலும்
                    உள்ளுக்குள்
                    பெருக்கெடுக்கிறது
                    இயல்பற்ற
                    பேரச்சம்....
               
                                    (நன்றி. ஆனந்தவிகடன்.....6.11.2013)

////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////


                                               

                                                      இருளும் ஒளியும்...

                                                                             - ஹரணி



                       தீபாவளி கூட்டம் சாலை முழுக்கத் தெரிந்தது.

                       இரு சக்கர வாகனங்களில் விரைந்தபடியும்... சைக்கிளில் மிதித்தபடியும்... நடந்துகொண்டும்.. அவரவர்கள் கைகளில் வாகனங்களில் பளபளப்பான பல வண்ண ஜவுளிக்கடை பைகள்...

                       சில இடங்களில் இருள் கவ்விக் கிடந்தது சாலையில்

                       அந்த இடங்களில் பேருந்து நிறுத்தங்களும்... அல்லது சிறு பாலங்களும் இருந்தன.

                        துர்ரத்து தெருவிளக்கின் ஒளியில் அவை தங்களை அடையாளம் காட்டிக்கொண்டிருந்தன.

                          கீழவாசலில் இருந்து மெயின் சாலைக்கு ஏறும் சிஆர்சி அருகில் சாலையைக் கடந்து சைக்கிளைத் தள்ளினாள் தனலெட்சுமி... நெற்றி முழுக்க வியர்வை.. தலை எண்ணெய் காணாமல் பரந்து கிடந்தது.. காதுகளில் தன சுயம் இழந்த கவரிங் வளையங்கள்... கைகளில் ரப்பர் வளையல் போலத் தோற்றம் கொண்டிருந்த வளையல்கள்... சைக்கிளின் பின் கேரியரில் அந்த மரத்துர்ள் மூட்டை இழுத்தது சைக்கிளை முன்நோக்கி தள்ள முடியாமல்.. பெரிய மூட்டை சற்று கணத்தது.. மரத்துர்ள் அடுப்புத்தான் அவளுக்கு விவரம் தெரிந்த காலத்திலிருந்து.. நான்கு நாட்களுக்கு ஒருமுறை கீழவாசலுக்கு சைக்கிளில் ஏறிப்போய் மரப்பட்டறையில் வாங்கி வருவதும் நிற்கவில்லை.

                  சற்று களைப்பாக இருந்தது. வடவாற்றுப் பாலத்தின் ஓரமாக ஆஞ்சநேயர் கோயில் அருகில் சைக்கிளை சற்று நிறுத்தினாள்.. யாரும் பார்க்கிறார்களா என்று ஒருமுறை பார்த்துக்கொண்டு தலையைக் குனிந்து பாவாடையின் கீழ்நுனியை உயர்த்தி முகத்தைத் துடைத்தாள்..பின் சட்டென்று கீழே விட்டாள். யாரும் பார்த்திருப்பார்களோ என்கிற அச்சத்தில்..

                 முகத்தைத் துடைத்த சில நொடிகளுக்குள் மறுபடியும் அவள் முகத்தில் வியர்வை முத்துக்கள் கொப்பளித்து பிரகாசித்தன..

                  எரிச்சலாக இருந்தது.

                  ஆஞ்சநேயர் கோயிலில் கூட்டமில்லை. அப்போதுதான் அந்தப் பெண்ணைக் கவனித்தாள். அவள் காயத்ரி..

                     தன்னோடு படித்தவள் என்றதும் அவளைக் கூப்பிட்டாள்.

                    காயத்ரியும் இவளைப் பார்த்துவிட்டாள்.

                    ஏய் தனம் எப்படியிருக்கே?

                     நல்லாயிருக்கேண்டி.. நீ எப்படி இருக்கே...

                     எனக்குக் கல்யாணம் ஆயிடிச்சுடி... என்று சொல்லி தன் கழுத்தின் மாறாத மஞ்சள் கயிற்றைக் காட்டினாள்.

                     தனலெட்சுமிக்கும் சிரிப்பு வந்துவிட்டது. கல்யாணம் ஆயிடிச்சா?
ஏண்டி எனக்கு சொல்லலே?  என்றாள்.

                      கோவிச்சுக்காதடி... மறந்துபோயிடிச்சி....ஆமா இன்னமுமா
மூட்டை அடிககறத விடலியா நீ? என்றாள் சிரிப்பை நிறுத்தி.

                       ஆமாண்டி. எரிச்சலா இருக்கு. ஆனா எங்க வீட்டுலே மரத்துர்ள் அடுப்புத்தானே ... நீதான் வந்திருக்கியே... இலவச கேஸ் கொடுத்ததகூட கொடுத்திட்டோம் வேண்டாம்னு... சிலிண்டர் வாங்க வருமானம் ஏது?

                        நீ பாவம்டி.. என்றாள்

                        சரி விடு..உன்ன பாத்ததும் நம்ப ஸ்கூல் ஞாபகம் வந்துடிச்சிடி..
எப்படி படிப்பே நீ?  இங்கிலிசுலேயும் சமுக அறிவியல்லேயும் உன்ன யாருமே முந்த முடியாதுடி... என்றாள் காயத்ரி.

                        அதெல்லாம் முடிஞ்சுப்போச்சுடி காயத்ரி.. எங்கப்பாவுக்கு உடம்பு சரியில்லாமப் போனதிலேர்ந்து வண்டி ஓட்டறதில்லே... எங்கம்மாதான் அரவை மில்லுக்கு போவுது.. நானும் ஒரு கவரிங் கடைக்கு வேலைக்குப் போறேன்.. குடும்பம் ஓடுதுடி. . ஆமா உங்க வீட்டுக்காரரு என்ன பண்ணறாரு..

                       காயத்ரி பேசாமல் இருந்தாள்.

                       என்னடி பேசாம இருக்கே?

                       எங்கம்மா வேலை பாத்தாங்களே புளி முதலியார் வீடு...

                       ஆமா...

                       அவரு பொண்டாட்டி செத்துப்போச்சின்னு என்ன கேட்டாருன்னு எங்கம்மா எனன் அவருக்கு கட்டி வச்சிடிச்சி..

                       அடிப்பாவி.. அவரு உங்கப்பா வயசுல்ல..

                       வேற யாருடி என்ன கட்டிக்குவா...காது கழுத்த மூடக்கூட எதுவும் இல்லேன்னு அம்மா சொன்னா.. கட்டிக்கிட்டேன்.. மாடிவீடு.. நாலஞ்சு புளியந் தோப்பு இருக்கு.. அதுக்கு காவல் எங்கப்பாதான்.. அதுக்கு சம்பளம் தனியாதர்றாரு..நிம்மதியா மூணுவேளை திருப்தியா ஆசப்பட்டத சாப்பிடறோம்டி..  சரி.. வரட்டுமா.. அம்மா தேடுவா..

                          போயிட்டுவா..

                           வீட்டுக்கு வாடி... கொஞ்சம் புளி எடுத்திட்டுப் போகலாம்..

                           வரேன் காயத்ரி..

                            சைக்கிளை ஸ்டாண்ட் எடுத்துவிட்டு தள்ளியபடியே ஆஞ்சநேயர் கோயில் வாசலில் நிறுத்திஅப்படியே கும்பிட்டு மறுபடியும் சைக்கிளைத் தள்ளினாள்.. மரத்துர்ள் மூட்டை பின்னாலிருந்து இழுத்தது.

                           சற்று நிதானம் பண்ணி தள்ளினாள். சைக்கிள் நகர்ந்தது.
என்னவோ சைக்கிள் தள்ளுவது தனலெட்சுமிக்குப் பிடித்திருந்தது. தனக்கு
எப்போது வேண்டுமானாலும் கல்யாணம் ஆகட்டும். தாமதம் ஆனாலும் பரவாயில்லை என்று தனலெட்சுமிக்கு தோணியது.

                            தெருவிளக்கின் ஒளி அவள் தலைமேல் விழுந்து பின்னால் நகர்ந்துபோனது. சைக்கிளை முன்னால் தள்ளியபடி போனாள் தனலெட்சுமி.

                                                             0000000

                                           



                                   

















Wednesday, October 30, 2013

கேட்டதும் கசிந்ததும்



              வழக்கம்போலவே இவ்வாண்டும் தீபாவளி வந்துவிட்டது.

              ஒவ்வொரு ஆண்டும் வரும். கொண்டாடுவோம்.

             என்ன இன்னல்கள் இருந்தாலும் துன்பங்கள் சூழ்ந்தாலும் கொண்டாடுவது அவசியமாகிவிட்ட வாழ்க்கைச் சூழல்.

               தீபாவளி நெருங்குகையில் கடைத்தெரு நிரம்பிவழியும்.

               மக்கள் கூட்டம் சிறு ஓடையாகும் பின் நதியாகும் பின்னிரவில்
வெள்ளியும் நிலவும் மிதக்கும் அற்புதம் காணக் கண்கோடிவேண்டும்.

               அப்படியான நதியின் கரையில் நடந்தபோது காதில் விழுந்தவை

                00000000000000

                ஏண்டி.. உயிரை எடுக்கறே... அவவன் தீபாவளிக்கு நாயா பேயா
அலைஞ்சி பணத்த வாங்கிட்டு வந்தா.. படுத்தறே.. இருக்கற ரெண்டாயிரத்துக்
குள்ள எல்லாத்தையும் முடிச்சுக்க.. இல்லாட்டி எனக்கு ஒரு முழம கயிறு வாங்கிக்கொடு.. என்னால முடியாது...

               வருஷத்துக்கு ஒரு தடவை அழச்சிட்டு வர்றீங்க.. அரக்கப் பரக்க பாடுபட்டாலும் படுக்கப் பாயிருக்காதுங்கறது என்னோட தலையெழுத்து..
நான்தான் முதல்ல தொங்கணும்..

             ?????????????????????????????????

               ஏம்மா.. உக்காந்திருக்கே... எனக்கு இன்னொரு ஸ்பைடர் மேன்
டிரஸ் எடுத்துக் குடும்மா...

               இருடா...தம்பி.. பேசாம இரு... உனக்கு பைவ் ஸ்டார் வாங்கி
கொடுத்திருக்கேன்.. அப்பா உள்ள போயிருக்காரு வரட்டும்..

               நீ வாம்மா.. அப்பா வர்ற வரைக்கு போய் டிரஸ் பாக்கலாம்..

              என்ன படுத்தாதடா தம்பி.. அம்மா வயித்த பாரு.. தங்கச்சி
பாப்பா வேற உதக்கிறா.. வலிக்குது நடக்கமுடியல்லே..

             ஏம்மா...இப்படி வயித்த தள்ளிக்கிட்டு இந்தக் கூடடத்துலே வந்திருக்கே..
யாராச்சும் இடிச்சுட்டா.. பாத்தும்மா..

                என்னங்க ஆச்சு?

                ஏடிஎம்ல தொடச்சி எடுத்திட்டேன்.. எண்ணுர்ருவா இருக்கு.. இவனுக்கு
ஸ்பைடர்மேன் டிர ஸ் எடுத்துடலாம்.. போன தீபாவளிக்கே ஏமாத்தியாச்சு...

    ????????????????????????????????????????????????????????

                       யேய் பப்பி... உனக்கு இத்தோட நாலு சுடிதார் ஆச்சு.. போதுமா
இன்னும் வேணுமா?

                       ஒண்ணுமே புடிக்கல்ல டாடி.. ஜீன்ஸ் எடுத்துக் குடுங்க..

                       சரி.. வா..

         ???????????????????????????????????????????????

                       எனக்கே அசிங்கமா இருக்கு.. நாலுங்கிழமையுங்கூட  கையிலே
காசு இலலே.. பழையபடி வட்டிக்கு வாங்கிட்டுத்தான் வந்திருக்கேன்.. இந்தத் தடவை மாசம் சுளையா மூவாயிரம் வட்டிக் கட்டணும்..

                      என்னங்க பண்ணறது.. சமாளிப்போம்.. கேக்கற பிள்ளைங்களா
இருந்தா சொல்லி புரிய வைக்கலாம்..  ஒண்ணுக்கும் வறுமை புரியலே..

          ???????????????????????????????????????????


                       என்ன சார்.. வழக்கம்போல கோஆப்டெக்ஸ் தானா?

                       வேற பாலு.. நம்ப பட்ஜெட்டுக்கு அதான்..  பொண்ணுக்கு
வேற தலைதீபாவளி.. மாப்பிள்ளை அழைக்கப்போவணும்..

                      ??????????????????????????????????

                      என்ன சார் வேணும்.,,

                      பீட் காசு பத்துரூபா வாங்கிட்டு வரச்சொன்னாரு ஏட்டய்யா,,

                      இப்பத்தான் சார் கொடுதேன்..

                      அது வேற கணக்கு.. கொடு.. கூட்டத்துலே நேரமில்ல எடு...

                      காலையிலேர்ந்து நுர்று ரூவாய்க்கு வேவாரம் பார்த்தா ஐம்பது ருபா இவனுங்களுக்கு வாக்கரிசி போடவே சரியாயிடுது..

                       ???????????????????????????????

                        இதுக்குத்தாண்டி உன்னோட கடைத்தெருவுக்வே வரமாட்டேன்னு சொன்னேன்..

                       நாளு தவறாம அழைச்சிட்டு வர்றீங்க... இன்னிக்கு தப்பா
போச்சு?

                      ஏண்டி.. அவவன் துணி எடுப்பான்.. எப்பப் பாரு எடுத்த துணி புடிக்கலேன்னு மாத்த வரேன் இந்தக் கூட்டத்துல அவன் கன்னாபின்னான்னு
கத்துவான்..

                      நேத்தே கேட்டுட்டுதான் வந்தேன்.. பிடிக்கலேன்னு மாத்த வருவேன்னு..

                       சரி போயிட்டு வா..

                       இன்னொரு 200 கொடுங்க.

                       எதுக்குடி?

                       மாத்துற துணி கூட விலையிருந்தா...

                       அடக்கடவுளே...

                  ???????????????????????????????????


                    சைக்கிளை தள்ளியபடி .... சுக்கு காபி...சுக்கு காபி...
                    ஒரு சுக்கு காபி கொடுப்பா..

                    நீண்ட நாட்களாகவே கேட்கவேண்டிய கேள்வி..

                    இதுல என்ன கிடைக்கும்பா உனக்கு..

                    எப்படியும் 50 கிடைக்கும் சார்.. அதுக்கு மேல கெடைக்காது..
நேரமாச்சுன்னா ஆறிப்போயிடும்.. கொட்டவேண்டியதுதான்.. வலிய
போனா யார் சார் குடிப்பா.. வழிபூரா டீக்கடை இருக்கு..

                  ?????????????????????????????????????????


                            சரி போ கடைக்குள்ள..

                            அய்யா சாமி உன்ன கையெடுத்துக் கும்பிடறேன்.. இங்கேயே
உக்காரு நான்போய் துணி எடுத்திட்டு வந்துடறேன்..

                            நா... ன்.. பா...ழ்...க்க வேண்டாமா?

                           கடைக்குள் வந்து வாந்தி எடுத்திராதய்யா.. மானமே போயிடும்..

                          போடி... ஐ ம்.. டீசண்ட் பார்ட்டி.. குடிச்சிருக்கேன்.. ஆனா வாந்தி எடுக்கமாட்டேன்..

                          நாலைந்து சிறுபடிகள் ஏறுவதற்கே நேரமாகிறது.

                          ஜவுளிக்கடை வாட்ச்மேன்.. அம்மா நீங்க மட்டும் போங்க..
நீங்க உள்ளே போகதீங்க சார்.. திட்டுவாங்க..

                          ங்கோத்தா.. .. எவன்டா.. என்னை தடுக்கிறது.. நாயே...

                          தகராறு தொடங்க... அய்யோ கடவுளே என்றபடி அவனை இழுத்துக்கொண்டு திரும்புகிறாள் அந்த தர்மபத்தினி..

                            ????????????????????????


                            என்னை காவு குடுக்கன்னு பொற்ந்திருக்கு சனியன்... வாயிலும் கன்னத்திலும் மாறி மாறி விழுகின்றன சுளிர் அடிகள்... துடித்துப்போகிறான்
அந்த சிறுவன்.

                            ஏமமா இப்படி பச்சபுள்ளய அடிக்கிறே?

                            புடிவாதம் புடிச்சி நான்தான் வச்சுக்குவேன்னு அம்பது ரூபாய வச்சிருந்து இப்ப எங்கய போட்டுடுச்சுங்க.. எப்படி துணி எடுப்பேன்..

                            ஐம்பது ரூபாயில் என்ன துணி எடுப்பாள்?

                             ??????????????????????????????

                             ஏய்யா என்ன கூடடம்?

                              வயசானவரு மயங்கி விழுந்துட்டாரு?

                              ஏம்பா இந்தகூட்டத்துலே வர்றீங்க?

                             பேரப் புள்ளங்களுக்கு துணி எடுக்க வந்தாராம்..

                             சரி..

                             அவரு பணத்தை யாரோ அடிச்சுட்டாங்களாம்-

                             எவ்வளவு?

                             ரெண்டாயிரம்.. அதான் பென்ஷன் பணமாம்...

                               ?????????????????????????????