Sunday, May 13, 2012

அம்மா,,,அம்மா...அம்மா...


             இன்று அன்னையர் தினம்.

             எல்லோருக்கும் இன்றைக்கு அவரவர் அம்மாவைப் பற்றிய நினைவுகள் கட்டாயம் வராமல் இருக்காது. அதேசமயம் நம்முடைய பிள்ளைகளையும் நாம் அந்த அன்னை நிலையில் நின்று எண்ணிப்பார்க்கவும் செய்யும் நாள் இது.

             என் அம்மாவைப் பற்றி சிலவற்றைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

            1. படிப்பறிவு ஒரு சிறிதும் இல்லாதவள் என்னுடைய அம்மா. எனக்குத் தெரிந்து ஒவ்வொரு எழுத்தையும் தள்ளிப்போட்டு தன்னுடைய பெயரை எழுதக் கற்றுக்கொண்டிருந்த அம்மா அதையும் மறந்துபோனாள் என்பதுதான் உண்மை.

           2. தெருவில் அம்மாவிற்கு ஒரு பெயர் உண்டு அவளைப் போல் பிள்ளைகளை வளர்க்கவேண்டும். அக்காக்களும் தம்பியும் நானுமாக இருந்த பெரிய குடும்பம். அதிகாலையில் எழுந்துவிடவேண்டும். எழுந்தவுடன் குளித்துவிடவேண்டும். மழைபெய்த சேற்றுத்தண்ணீர் நிறத்தில் மங்கலாக சூடாக காபி என்று ஒன்று கொடுப்பாள். அதைக்குடித்துவிட்டு வீட்டுத் திண்ணையில் (இப்போது திண்ணைகள் எடுக்கப்பட்டுவிட்டன) ஆளுக்கொரு பக்கம் உட்கார்ந்து பாடம் படிக்கவேண்டும். என்ன படிக்கிறோம் என்று அவளுக்குத் தெரியாது. ஏமாற்றினாலும் தெரியாது. ஆனாலும் படிக்கவேண்டும். ஏமாற்றாது படித்தோம். இன்று நன்றாக இருக்கிறோம். ஏதாவது தவறு செய்துவிட்டால் உடனே தொடையில் அழுத்தமாக சிவந்துபோகுமளவுக்குத் திருகுவாள். அப்படித் திருகும்போது கண்ணில் கண்ணீரும் வாயில் சப்தமும் வரக்கூடாது. மௌனமாக அந்த வலியை அனுபவிப்போம்.

             3, செவ்வாய் வெள்ளி வீடலசுவாள். கூடத்தில் வைக்கப்பட்டிருக்கும் அண்ணாடவில் ஆளுக்கொரு பாத்திரத்தில் கொல்லைப்புறம் போய் அடிப் பைப்பில் தண்ணீர் அடித்து வந்து நிரப்பவேண்டும். வீடலசி கூட்டிவிட்டு கோலம்போட்டுவிட்டு. எல்லோரும் குளிக்கவேண்டும். குளித்துவிட்டு சாமிஅறையின் முன் உட்கார்ந்து சாமிப்பாட்டு படிக்கவேண்டும். கிட்டத்தட்ட அரைமணிநேரம் படிக்கவேண்டும். விடமாட்டாள். அப்புறம்தான் சாப்பாடு எல்லாமும்.

             4. ஒவ்வொரு வியாழக்கிழமையும் எங்கள் வீட்டிலிருந்து பெரிய கோயில் 2 கிலோமீட்டர் குறுக்குரோட்டில் (பழைய திருவையாறு ரோடு) நடத்தியே அழைத்துக்கொண்டுபோவாள் கோயிலைச் சுற்றி ஒவ்வொரு சந்நிதியிலும் வணங்கிவிட்டு சிறிதுநேரம் உட்காரவேண்டும் புல்வெளியில். அப்போது சொல்வாள் திக்கத்தவங்களுக்குத் தெய்வம்தான் துணைம்பாங்க. நமக்கு எல்லாமும் சாமிதான் என்பாள். திரும்பி நடந்துவரும்போது உப்புக்கடலை ஒருபொட்டலம் வாங்கி ஆளுக்கு கொஞ்சம் கொடுத்து அதைக் கொறித்துக்கொண்டே கால் வலிக்கவலிக்க வீடு வந்துசேர்வோம்.

            5. அடிக்கடி அம்மாவின் கிராமத்திற்குப்போகும்போது கிராமத்து எல்லையில் இருக்கும் முனியாண்டவர் அம்மாவின் பேவரைட். அங்குதான் ஒருமுறை திருவையாறு சப்தஸ்தானம் பார்த்துவிட்டு ஊர் திரும்பும்போது வயது வநத்தாக சொல்வாள். முனியாண்டவர் அதையெல்லாம் ஒன்றும் கண்டுக்கொள்ளாமல் காக்கிறவர் என்று ஒவ்வொருமுறையும் ஊருக்குப் போகும்போதெல்லாம் அந்த முனியாண்டவர் கோயில் வாசலில் உட்கார்ந்து ஒரு பாட்டம் அழுதுவிட்டு எம்புள்ளங்களப் பாத்துக்கப்பா என்பாள்.

            6. அம்மாவின் அம்மாவும் அப்பாவும் இறந்துபோனபின்பு அம்மாவின் மூனறு தம்பிகளையும் அம்மாதான் வளர்த்தாள். அதற்கு அப்பாவின் ஒத்துழைப்பு அதிகம். அதில் எப்போதும் அம்மாவிற்கு அப்பா குறித்த பெருமை உண்டு. அடிக்கடி சொல்கிற வார்த்தை ஆயிரம் யானையை நிறுத்தலாம் நெஞசில அத்தனை அழுத்தம் என்பாள். அப்பா உயிருக்குப்போராடிய கடைசி நிமிடம்வரை அம்மா இதை சொன்னாள்.

           7. படிக்காதவள் என்றாலும் அவள் அறிவுறுத்திய வாழ்வியல் கருத்துக்கள் இன்றைக்கும் உதவுகின்றன. எதிரியாக இருந்தாலும் வீடுதேடி வந்துட்டா வான்னு கூப்பிட்டு உபசரிக்கணும். நமக்கு ஒருத்தரைப் பிடிக்கலேன்னா அவங்களப் பத்தி எந்த அவதுர்றும் பேசாம விலகி வந்துடணும். ஒதுங்கிடணும். அப்படியே அடிக்க வந்தாலும் இது வாங்கற காலம்னும் நினைச்சு வாஙகிக்கலாம். எத்தனை உயர்வு வந்தாலும் ஆடம்பரம் பண்ணக்கூடாது. பெரிதா பீத்திக்கக்கூடாது. அமைதியா இருக்கணும். ஒருவில்லை சூடம் கோயில் வாசல்ல ஏத்தி வச்சி சாமிய வேண்டிக்கிட்டாபோதும்.

          8. ரொம்ப சிக்கனமாக இருப்பாள்.  ஒரு கத்தரிக்காய்...ஒரு வாழைக்காய்...ஒரு முட்டை என்று வறுமை வாழ்க்கை வாழ்வதில் அம்மாவுக்கு அலாதி பிரியம். அடிக்கடி சொல்வாள் தொண்டைக்கு அப்புறம் எல்லா ருசியும் மலம்தான். எனவே உணவில் வளைத்துக்கொண்டு சாப்பிடக்கூடாது என்பாள்.

          9. எந்தக் குறையாக இருந்தாலும் தெய்வத்திடம் முறையிடவேண்டும். அவன் பார்த்துக்குவான் என்பாள். அவனுக்குத் தெரியும் யாருக்கு என்ன எப்ப கொடுக்கணும்.. நல்லது கெட்டதும் இப்படித்தான்னு.

        10, தேவையில்லாமப் பயப்படக்கூடாது. எத்தனை பெரிய ஆளா இருந்தாலும் நியாயம் நம்ப பக்கம் இருந்தா துணிச்சலா எதிர்க்கலாம் என்பாள். அப்படிபோனா இந்த உயிர் போகட்டும் என்பாள்.

            அப்பா இறந்துபோய் ஆறாண்டுகள் ஆகிவிட்டன. அப்பாவின் ஓய்வூதியத்தில் அம்மா தனியாக அவள் வீட்டில் இருந்துவருகிறாள். அவளின் போக்கில் எதுவும் மாறவில்லை. இப்போது உடல்நிலையில் தடுமாற்றம் வந்திருக்கிறது.  அவள் இயல்புகள் எதுவும் மாறவில்லை. என்னுடைய உயர்வாக இருந்தாலும் சரி...என்னுடைய மகன்...மகள் உயர்வாக இருந்தாலும் சரி போய் சொன்னால் வாழ்த்தி நெற்றியில் திருநீறு இடுகிறாள். கவனமாக இருங்கள் என்கிற ஒற்றைச்சொல்லுடன் நிறுத்திக்கொள்கிறாள்.

             அம்மா குறித்து நிறைய இருக்கின்றன அம்மாவிடம் கற்றுக்கொண்டதும் நிறைய இருக்கின்றன.