Thursday, November 10, 2011

குழந்தைகளிடம் கேட்டவை.

குழந்தைகள் எப்போதும் எந்தக் காலக்கட்டத்திலும் நம்மை ஆச்சர்யத்திற்கும் அதிர்ச்சிகளுககும் உள்ளாக்கிக்கொண்டேயிருக்கிறார்கள். அவர்களின் பேச்சும் செயலும் பிரமிப்பும் மன அதிர்வையும் தருகின்றன நமக்கு. நான் சில குழந்தைகளிடம் கேட்ட கதைகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.


மூன் மம்மி இருக்குல்லே..அதுக்கு ஏராளமான ஸ்டார்ஸ் பேபிஸ்..அதனால அது எப்பவும் சிரிச்சிக்கிட்டேயிருக்கும். ஆனா சூரியன் பாவம். அதுக்கு பேபிங்களே இல்லை. அதனால அது மூன் மம்மியைப் பார்த்ததும் கோபமாயிடிச்சி..அது மலைமேல இருந்துச்சா..அங்கிருந்து கிளம்பிடுச்சி. அதுக்கு ஒரே கோபம். வெளியே வந்து வேகமா மூன் மம்மியையும் ஸ்டார்ஸ் பேபிங்களயும் முழுங்கிடிச்சி. அதனாலதான் பகல்லே மூன் மம்மியும் ஸ்டார்ஸ் பேபிங்களும் காணமாப் போயிடிச்சி. அவ்வளவுதான் கதை.

000000000000

தம்பி கடவுள் இருக்காரா?

சாமி இருக்கா இல்லையான்னு தெரியாது.

கடவுள பார்த்திருக்கியா?

கடவுள பாத்திருக்கேன்.

எங்கே?

அதான் தெருத்தெருவா தேர்ல வர்றாரே...


00000000000000


ஒரு குழந்தையிடம் தாய் கதை சொல்லிக்கொண்டிருந்தாள். பாட்டி வடை சுட்ட கதை. கதையில் கடைசியில் நரி காக்கா போட்ட வடையைக் க்வ்விட்டு போயிடிச்சிசொன்னதும். குழந்தை கேட்டது தப்பா கதைய சொல்றியே மம்மி.. என்றது.

என்னப்பா தப்பு?

நரி வைல்ட் அனிமல் ஆச்சே? அது எப்படி வடையை சாப்பிடும். கறிதானே
சாப்பிடும்? கதைய மாத்தி சொல்லு.

0000000

ஒரு கவிதை...


குழந்தைகள்

வாழ்க்கைப் படகின் துடுப்பு...
நம்பிக்கையின் வேர்
எந்தப் பக்கத்தின் இருளையும்
வெளிச்சத்தால் நிரப்புவர்கள்..
கடவுளின் பல அவதாரங்களையும்
காட்சிப்படுததக்கூடியவர்கள்
கடவுளின் சிரிப்பையும்
கடவுளின் அழுகையையும்
கடவுளின் தவிப்பையும்
கடவுளின் ஏக்கத்தையும்
கடவுளின் பிடிவாதத்தையும்
காட்டுபவர்கள்...
ஒன்றேயொன்றுதான்
குழந்தைகளிடம் நெருங்க
குழ்ந்தைகளாகவேணடும் நாம்..
ஆனாலும் குழந்தைகளாக
முயல்வது ரொம்பக் கடினம்
அதே சமயம் அது ரொம்ப
எளிதும்கூட...


தம்பி சாமி கும்பிடுப்பா...

சாமிய கும்பிட்டா என்னா அம்மாச்சி?

சாமி கேட்டதெல்லாம் குடுக்கும்,,

அப்புறம் ஏன் கடையில பெல்ட் சாக்ஸ் எல்லாம் கேட்டா காசு கேக்கறாங்க அமமாச்சி?

00000000000


ஒவ்வொரு முறையும
ஒவ்வொரு பொருள்தரும்
கவிதை
குழந்தைகள் மட்டுமே...

மனித இனத்தின்
முதல் மொழி
குழந்தைகள் மட்டுமே....

எல்லா வாழ்வின்
எப்படிப்பட்ட சிக்கல்களையும்
தீர்ப்பவர்கள்
குழந்தைகள் மட்டுமே...


ஆகவே
குழந்தையாகப் பிறந்து
குழந்தையாகவே
இறப்பவர்கள் மட்டுமே
வாழ்ந்தவர்கள்...