Thursday, January 20, 2011

அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை

.

இன்று தைப்பூசம் முருகப் பெருமானை நினைந்து வழிபடும் சிறப்புத் திருநாள் இது.இந்நாளில் முருகப்பெருமானைத் தனது குருவாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த அருளாளர் வடலுர்ர் இராமலிங்க சுவாமிகள். அருளாளர் பற்றிய சிறு அறிமுகமே இப்பதிவு.

தமிழ் மண்புலம் செய்த தவப்பயனால் சரியாக நுர்ற்றைம்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்னே தென்னார்க்காடு மாவட்டம் சிதம்பரத்திற்கருகில் உள்ள மருதுர்ரில் கருணீக மரபில் இராமையா பிள்ளைக்கும் சின்னம்மையார்க்கும் மகனாக அவதரித்தவர். சகோதரர் சபாபதிப் பிள்ளையால் வளர்க்கப்பெற்றவர். செந்தமிழ்க் கடவுளாகிய முருகபெருமானது திருவருட்காட்சி இளமையிலேயே கிடைத்தது. எனவே முருகனைத் தனது குருவாகக் கொண்டார். உலகெங்கும் நீக்கமற எல்லாவற்றிலும் இறைவன் சுடர்விட்டு விளங்கும் ஜோதியாக இருக்கிறார் என்று உணர்த்தியவர்.

சாதி மத வேறுபாடு இல்லாமல் எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டியவர் வள்ளலார். சமயத்தாலும் சாதியாலும் விளையும் தீங்குகளைக் களைய சீர்திருத்தம் கண்டவர்.

ஏழைகள் தொடங்கி எல்லா மக்களும் அடையும் இன்னல்களைப் போக்குதற்கென திருவுளங்கொண்டு உயர்ந்த நோக்குடன் சமரச சுத்த சன்மார்க்க நெறியை வகுத்தார். இந்நெறிக்கிணங்க இவற்றைப் பரப்ப வடலுர்ரில் சன்மார்க்க சங்கம். சத்திய தருமச்சாலை, சத்திய ஞான சபை எனும் மூன்று அருள் நிலையங்களை நிறுவி தொண்டுசெய்த பெரும் ஞானி.

தனது பரந்துபட்ட இறை உள்ளத்தால் அருளிச் செய்தவையே திருவருட்பா எனும் அரிய பொக்கிஷம். ஆறுதிருமுறைகளாக 5818 திருப்பாடல்களாக அருளிச் சென்றிருக்கிறார். பல்வேறு சமயங்களில் வள்ளலாரால் கடிதமாகவும் சிறப்புப் பாயிரமாகவும் தனிப்பாடல்களாகவும் எழுதப்பெற்றவை இப் பாடல்கள்.

1979 ஆம் ஆண்டு தொடங்கி 1989 வரையில் இத்தொகுதிகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இதற்கு அருமையான உரையை எழுதியவர் உரைவேந்தர் ஔவை சு.துரைசாமிப் பிள்ளையவர்கள்.

ஆன்மநேய ஒருமைப்பாட்டையும் சாகாக் கல்வியையும் வலியுறுத்திய அருளாளர் வள்ளலார். பசி, பிணி, பகை இவற்றை நீக்கவே பாடுபட்டார். அதனால்தான் வடலுர்ரில் வயிறு என்றழைக்கப்படும் சத்திய தருமச் சாலையையும் சிரசு என்றழைக்கப்படும் சத்திய ஞான சபையையும் நிறுவித் தொண்டாற்றினார்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் வாடினேன் என்று உயிரிரக்கம் காட்டியவர். இன்று வடலுர்ர் ஒளிவெள்ளம் கொண்டிருக்கும். ஒளிப்பிழம்பு அருளாளரை நினைந்து போற்றுவோம். இன்னொரு சந்தர்ப்பத்தில் இவரைப் பற்றிய சுவையான தகவல்களுடன் பகிர்வேன். அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை.